அடடே….இது லிஸ்ட்லயே இல்லயே…..
சீமன்ஸ் இந்தியா நிறுவனம் மின்சார பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக இந்திய ரயில்வேவுடன் ஒரு அசத்தலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.அதாவது 26 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மின்சார ரயில் பெட்டிகளுடன் இணைக்கும் இழுவை திறனுள்ள இஞ்சின்கள் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9ஆயிரம் குதிரைத்திறன் ஆற்றல் கொண்ட இந்த வகை ரயில் இஞ்சின் மற்றும் முன்பெட்டிகள் இந்திய ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக அளிக்கப்படும் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். இந்திய ரயில்வேவை நவீன மயப்படுத்தும் முயற்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அடுத்த 11ஆண்டுகளில் டெலிவரி கிடைக்கும் வகையிலும் அடுத்த 35 ஆண்டுகளுக்கு பராமரிப்பை செய்யவும் இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் தாஹோத் பகுதியில் வைத்து இந்த ரயில் பெட்டிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குஜராத்தில் தயாராகும் இந்த வகை சரக்கு ரயில் பெட்டிகளுடன் இணைந்த ரயில் இஞ்சின்கள் 4ஆயிரத்து 500 டன் சரக்குகளை இழுக்கவும்,மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த வகை மின்சார ரயில் இஞ்சின் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் 800 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் முற்றாக குறைந்து சுற்றுச்சூழல் மேம்படும் என்று சீமன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோலன்ட் புஷ்ச் தெரிவித்துள்ளார்.