ஓபெக் நாடுகளின் திடீர் கெடுபிடி..
எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு நாடுகளைத்தான் ஒபெக் என்று அழைக்கிறார்கள். இந்த அமைப்பு, வரும் ஜூலை மாதத்தில் இருந்து ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக அறிவித்தது. இதன் எதிரொலியாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை என்பது ஒரு பேரலுக்கு 2 டாலர் வரை உயர்ந்தது. தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 78.42 டாலர்களாக இருக்கிறது.தற்போதைய சீசனில் மிக அதிகபட்சமான 78.73 டாலரின் அளவுக்கு விரைவில் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக அமெரிக்க கச்சா எண்ணெய் சந்தையிலும் 2.27 டாலர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. தற்போது வரை சவுதி அரேபியா ஒரு நாளைக்கு 1 கோடி பேரல் கச்சா எண்ணெயை எடுத்து வரும் நிலையில் வரும் ஜூலையில் இருந்து இது 90 லட்சமாக குறையும். தற்போது ரஷ்யா குறைவான விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் அளித்து வருகிறது. அதற்கு நெருக்கடி தரும் வகையில் ஓபெக் மற்றும் சவுதிஅரேபியா போன்ற நாடுகள் காய்நகர்த்தி வருகின்றன. உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஓபெக் பிளஸ் நாடுகளின் அளவு மட்டும் 40 விழுக்காடுக்கும் அதிகமாக உள்ளது. சவுதி அரேபியாவின் முன்னெடுப்பால் ஓபெக் நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. திடீர் உற்பத்தி குறைப்பால் இந்தாண்டின் இரண்டாவது பாதியில் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.