ஆர்டர்களை நிறுத்தியதால் அதிர்ச்சி
தொடர்ந்து அதிகரித்து வந்த வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ. 1.74 லட்சமாக குறைந்திருந்தாலும், மும்பை ஜவேரி பஜாரைச் சேர்ந்த நகைக்கடைக்காரர்கள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் தங்கத்திற்கான புதிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அகில இந்திய ரத்தினம் மற்றும் நகை உள்நாட்டு கவுன்சிலின் (GJC) தலைவர் ராஜேஷ் ரோக்டே தெரிவித்தார்.
வெள்ளியின் பிரீமியம் கணிசமாக உயர்ந்து, கிலோவுக்கு ரூ.30,000 வரை எட்டியுள்ளது. இது வலுவான டிமாண்ட் மற்றும் குறைந்த அளவு சப்பளையினால் ஏற்பட்டுள்ளதாக ரோக்டே கூறினார். உள்ளூர் மற்றும் உலகளவில், தொழில்துறை மற்றும் முதலீட்டு தேவைகள் அதிகரித்துள்ளதே இந்த பற்றாக்குறைக்குக் காரணம்.
ஆஸ்திரேலியா, துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகளில் டிமாண்ட் வெகுவாக அதிகரித்துள்ளது, வெள்ளியின் பற்றாக்குறையை அதிகப்படுத்துவதாக கூறினார். “சில நிபுணர்கள் நவம்பர் மாத வாக்கில் விலைகளில் தற்காலிக சரிவு ஏற்படும் என்று கணித்துள்ளனர். ஆனால் நீண்ட கால அளவில், வெள்ளி விலை தொடர்ந்து உயரும்” என்று அவர் கூறினார்.
2030 வரை வெள்ளியின் நீண்டகாலக் கண்ணோட்டம் குறித்து மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (MOFSL) வெளியிட்ட அறிக்கையில், வெள்ளி விலைகள் அக்டோபர் 2025 இல் அவுன்ஸ் ஒன்றுக்கு $51.30 ஐத் தாண்டி, கடந்த ஒரு ஆண்டில் 70% க்கும் அதிகமான உயர்வை பதிவு செய்து, 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தொழில்துறை தேவை இப்போது மொத்த பயன்பாட்டில் 59% ஆகும்.
உலகளாவிய வெள்ளி சப்பளை தற்போது 31,000 டன்களாக உள்ளது, அதே நேரத்தில் டிமாண்ட் 35,700 டன்களைத் தாண்டியுள்ளது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 11.8 கோடி அவுன்ஸ் (3,655 டன்) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய ஒன்றாகும்.
தொழில்துறை பயன்பாடு 2024 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 68.05 கோடி அவுன்ஸ்களை எட்டியது. இது 2025 ஆம் ஆண்டில் 70 கோடி அவுன்ஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய சக்தி மின் உற்பத்தி, மின்சார வாகனம் மற்றும் மின்னணுத் துறைகளில் வெள்ளி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம். சூரிய சக்தி பேனல்களில் உள்ள ஃபோட்டோ ஓல்டாயிக் (PV) உற்பத்தியில் மட்டும் ஆண்டுதோறும் 20 கோடி அவுன்ஸுக்கு மேல் பயன்படுத்துகிறது. இது 2030 ஆம் ஆண்டில் 45 கோடி அவுன்ஸாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
