சோப்பில் குறையும் பாமாயில்…
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழ்வது இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம். இந்த நிறுவனம் தனது சோப் பொருட்களில் பாமாயில் பயன்பாட்டை 25 விழுக்காடு வரை குறைக்க முடிவு செய்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
லக்ஸ், லைஃப்பாய் உள்ளிட்ட சோப்புகளை இந்துஸ்தான் யூனிலிவர் தயாரிக்கிறது. பாமாயிலுக்கு பதிலாக பாலி சாக்கிரைட்ஸ் மற்றும் இயற்கையான கொழுப்பு அமிலங்களை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டி எஃப் எம் எனப்படும் இந்த பொருள் குறைவதால் தங்களுக்கு ஏகப்பட்ட பணம் மிச்சமாகும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம்தான் சந்தையில் 38 விழுக்காடு பங்களிப்பை தருகிறது. அதாவது 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சோப்புகளை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. கொரோனா காலத்தில் பாமாயில் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் இதுவரை அந்த அளவு விலையிலேயே பாமாயில் விற்கப்படுகிறதாம். வழக்கமான சோப்பில் பாமாயில் சேர்க்கப்படும் நிலையில் புதிய சோப் தயாரிப்பிற்கு பாமாயிலுக்கு பதிலாக தாவர எண்ணெய்கள் பயன்படுத்தப்பட இருப்பது தொடர்பாக ஆய்வகங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கின்றன. 22 வகையான பேட்டண்ட்கள் வாங்கப்பட்டுள்ளன. சோப்புகள் தயாரிக்க பயன்படும் பனை எண்ணெய், தென்கிழக்கு ஆசியா, மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்கா, மத்திய அமெரிக்காவில் விளையும் பனை மரங்களில் இருந்து கிடைக்கிறது. உலகளவில் இந்தியாதான் இரண்டாவது பெரிய சந்தையாக சோப் உற்பத்தியில் உள்ள யுனிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.