முதலீட்டாளர்களுக்கு பணம் தரவில்லை.. கொட்டு வாங்கிய SEBI..!!
சகாரா நிறுவனத்தின் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தராத செபிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிதி மோசடி புகார்கள் காரணமாக சகாரா பரிவார் குழுமத்தின் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால் சகாரா குழுமத்தில் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில், சகாரா நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி, விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கும்படி, உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி வசூலிக்கப்பட்ட 24 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு பரிவர்த்தனை ஒழுங்குறை ஆணையமான செபியிடம் செலுத்தப்பட்டது. தீர்ப்பு வழங்கி 9 ஆண்டுகளாகியும், முதலீட்டாளர்களுக்கு செபி இன்னமும் பணத்தை திருப்பி தரவில்லை.
இதுகுறித்து, பட்னா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேற்று (10.03.2022) வழக்கு விசாரணையின்போது, சகாரா குழும நிறுவனங்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உமேஷ் பிரசாத், கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 128 கோடி ரூபாயை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு செபி திருப்பி அளித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி தருவது தொடர்பாக உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் செபி பின்பற்றவில்லை என்று தெரிவித்தார்.
அப்போது, பணத்தை திருப்பி தராத செபிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சகாரா நிறுவனத்தின் ரூ.24 ஆயிரம் கோடியை முதலீட்டாளர்களுக்கு எப்போது கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.