1 லட்சம் கொடுத்துட்டு கிளம்புங்க!!!
வீடியோகான் நிறுவனத்துக்கு விதிகளை மீறி கடன் கொடுத்தாக எழுந்துள்ள புகாரில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரியான சந்தா கொச்சார் மற்றும் அவரின் கணவர் தீபக் கொச்சாரை மும்பை உயர்நீதிமன்றம் பினையில் விடுவித்துள்ளது. இருவரின் கைதும் சட்டவிதிகளை மீறி நடந்துள்ளதாக கூறியுள்ள நீதிமன்றம் இருவரும் தலா 1 லட்சம் ரூபாய் செலுத்தவும், சிபிஐ விசாரணைக்கு அழைக்கும்போது இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சிபிஐயிடம் இருவரின் பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிமன்றத்தில் கொச்சார் குடும்பத்தின் வழக்கறிஞர்கள், சந்தாவுக்கு தீபக்கின் வியாபாரம் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். பெண்ணான சந்தாவை கைது செய்யும்போது சிபிஐயுடன் பெண் போலீசார் யாரும் வரவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிபிஐ தரப்பு, தீபக் கொச்சாரின் நுபவர் ரினிவபல்ஸ் நிறுவனத்தில் தான் வீடியோகான் நிறுவன அதிகாரி வேணுகோபால் தூட் முதலீடு செய்திருப்பதாக சாடியது. சர்ச்சைக்கு உரிய வகையில் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் ஐசிஐசிஐ வங்கி சட்டவிரோதமாக 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியது. குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் டிரஸ்ட்டில் தீபக் கொச்சார் 2010 முதல் 2012 வரை இருந்ததாகவும் சிபிஐ அழுத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.