Paytm-ஐ லாபகரமானதாக்குவேன்.. விஜய் சேகர் ஷர்மா உறுதி..!!
Paytm நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவேன் என அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா உறுதியளித்துள்ளார்.
இணையவழி நிதி பரிவர்த்தனை செய்து வரும் Paytm Payment வங்கி சீனாவுக்கு பல்வேறு தகவல்களை பகிர்ந்ததாக எழுந்த புகாரின்படி, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், தரமற்ற பிரஷர் குக்கர், மற்றும் ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த Paytm இ-காமர்ஸ் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது.
இந்த காரணங்களால் பேடிஎம் நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களின் பணத்தை பெருமளவில் அழித்த பங்காக பார்க்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து எழுந்த புகார்கள் காரணமாக, பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை கண்டிருந்தன.
பங்குகளின் கடுமையான வீழ்ச்சி தொடர்பாக மும்பை பங்குச் சந்தை எழுப்பியிருந்த கேள்விக்கு, பேடிஎம், தங்கள் நிறுவனம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பங்குச் சந்தைகளுக்கு தேவையான அனைத்து வெளிப்பாடுகளையும் செய்துள்ளதாகவும், நிறுவனத்தின் வணிக அடிப்படைகள் வலுவதாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், Paytm நிறுவனத்தை லாபகரமானதாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவேன் என அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
Paytm நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதம், 4-ம் காலாண்டில், கடந்த ஆண்டை விடவும் 374 சதவீதம் 6இ7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன் மதிப்பு கடந்த ஆண்டை விடவும் 417 சதவீதம் அதிகரித்து 3 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் வரையிலான காலாண்டில், பேடிஎம் சூப்பர் ஆப்பினுடைய சராசரி மாதாந்திர பணப்பரிவர்த்தனை பயனாளர்களின் எண்ணிக்கை 41 சதவீதம் உயர்ந்து 70.9 மில்லியனாக இருக்கின்றனர். வணிகர்களுடைய பரிவர்த்தனை மதிப்பானது 104 சதவீதம் அதிகரித்து 2.59 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேகர் ஷர்மா பேடிஎம் பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த ஆறு காலாண்டுகளில், எபிடா விகிதம் அதிகரிக்கும். இது பங்குச்சந்தை மதிப்பீட்டாளர்களின் கணிப்பை விட அதிகமாகவே இருக்கும். நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ள மாட்டோம். விரைவில் வளர்ச்சி விகிதத்தை எட்டி காட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.