மீண்டும் பலரை வேலையைவிட்டு தூக்கிய பேடிஎம்..
முறையான வாடிக்கையாளர் விவரங்களை பராமரிக்காத குற்றத்துக்காக அண்மையில் பேடிஎம் பேமண்ட் வங்கி இயங்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கடிவாளம் போட்டது. இதனால் அந்த நிறுவன பங்குகள் பெரிய அளவில் வீழ்ந்தன. இந்த சூழலில் பேடிஎமின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அண்மையில் தங்கள் பணியாளர்கள் சிலருக்கு பிங்க் நிற நோட்டீஸ் அளித்துள்ளது. அதாவது அவர்கள் பணியில் இருந்து விலகவேண்டும் என்பதே இதற்கான அர்த்தமாகும். மார்ச் வரையிலான காலகட்டத்தில் பேடிஎம் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் 3 ஆயிரத்து 500 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்ட பிறகு அந்நிறுவனத்தில் 36 ஆயிரத்து 521 பணியாளர்கள் இருக்கின்றனர். பேடிஎம் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அந்நிறுவனமே வெளியில் 30 நிறுவனங்களில் தங்கள் பணியாளர்களை சேர்த்துவிட்டுள்ளனர். பேடிஎம் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பணியாளர்களில் சிலருக்கு போனஸ்களும் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த பணிகளை அந்நிறுவனம் செய்கிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை காரணமாக பேடிஎம் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்த நஷ்டம் 167.5 கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் இந்த நிறுவனம் அதிகம் முதலீடு செய்திருக்கிறது.