பேடிஎம் பேமண்ட் வங்கி சிஇஓ சுரிந்தர் பதவி விலகினார்
பேடிஎம் பேமண்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரும்,தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா தனது பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பங்குச்சந்தையில் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சுரிந்தர் சாவ்லா வரும் ஜூன் 16 வரை பதவியில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பேடிஎம் பேமண்ட் வங்கியில் இருந்து அதன் நிர்வாகியான சுரிந்தர் விலகியிருப்பது சந்தையில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. பேடிஎம் பேமண்ட் வங்கியின் நிர்வாகிகளை களைத்துவிட்டு 5 சுதந்திரமான இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் நாமினி என்று நிறுவனத்துக்கு எவருமே கிடையாது. யுபிஐ சேவையை தொடரப்போவதாக கூறியுள்ள பேடிஎம் நிறுவனம்,அதன் இயக்குநர்களில் ஒருவரான விஜய் சேகர் சர்மாவையும் இழந்துள்ளது. விதிகளை மீறியதாக பேடிஎம் பேமண்ட் வங்கி இனி இயங்கக் கூடாது என்று கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமண்ட் வங்கி சேவையை நிறுத்தவும் ரிசர்வ் வங்கி ஆணையிட்டது. மார்ச் 14 ஆம் தேதியே பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 நிறுவனம் யுபிஐ செயலிகளை மூன்றாம் தர நிறுவனமாக இயக்க அனுமதி அளித்திருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பேடிஎம் நிறுவனம் தற்போது ஆக்சிஸ், எச்டிஎப்சி ,எஸ் ,வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கியுடன் கைகோர்த்து பேமண்ட் சிஸ்டத்தை அளித்து வருகிறது. பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 50 விழுக்காடு குறைந்திருக்கிறது. ஏப்ரல் 9 ஆம் தேதி ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.95 விழுக்காடு சரிந்து ஒரு பங்கு 404.30 ரூபாயாக மும்பை பங்குச்சந்தையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.