உச்சம் தொட்ட சந்தை மூலதனம்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது புதிய உச்சங்களை தொட்டு வருவதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் பதிந்த அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் என்பது 291லட்சத்து89 ஆயிரம் கோடி ரூபாயாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.இந்த உயர்வு என்பது கடந்த மார்ச் 28ஆம் தேதிக்கு பிறகு 16 விழுக்காடு அதிகமாகும்.இந்தாண்டில் இதுவரையிலான உயர்வு என்பது 4 விழுக்காடு அதிகமாகும். இதற்கு முன்பு கடந்த 2022 டிசம்பர் 14ஆம் தேதி 291.30 லட்சம் கோடி ரூபாயாக சந்தை மூலதனம் இருந்தது. எதிர்பார்த்ததை விட அதிகவேகத்தில் இந்திய சந்தைகள் முன்னேற்றம் கண்டு வருவதால் இந்த உயர்வு காணப்படுகிறது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் நிலை நிறுத்தியதன் காரணமாக விலைவாசி உயர்வும் கட்டுப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். ரிசர்வ் வங்கி எடுத்து வரும் சாதகமான முடிவுகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அதிக நம்பிக்கை ஏற்பட்டு இந்திய பங்குகளை வாங்கி குவிக்கின்றனர். இதுவரை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63,191புள்ளிகள் தொட்டதே அதிகபட்ச புள்ளிகளாக உள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் ஏற்படும் பட்சத்தில் இந்த உச்சகட்ட புள்ளிகள் தகர்க்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.