பெட்ரோல்.. டீசல் விலை உயரும் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) இன் தகவல்களின்படி, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மார்ச் 1-ந் தேதியன்று ஒரு பீப்பாய்க்கு USD 102 க்கு மேல் உயர்ந்தது.
எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப, சில்லறை விலை லிட்டருக்கு ₹9 அல்லது 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்வதால் சர்வதேச எண்ணெய் விலைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது – 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, தொடர்ச்சியாக கடந்த 118 நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் திருத்தப்படவில்லை. 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வாக்குப் பதிவு முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என பிரபல நிதிஆய்வு நிறுவனமான ஜேபி மோர்கன் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.