ஆட்டம் தொடருது.. – 2-ம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!!
2-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி முதல், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
137 நாட்களுக்கு பிறகு, நேற்று(22.03.2022) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. 2-வது நாளாக இன்றும்(23.03.2022) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.102.91 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல், டீசல் இரண்டும் 80 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.01-ஆகவும், டீசல் ரூ.88.27 காசுகளாகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 காசுகள் அதிகரித்து ரூ.106.34 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.91.42-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே லிட்டருக்கு 85 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.67 காசுகளாகவும், டீசல் ரூ.95.85-ஆகவும் விற்பனையாகிறது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வந்தாலும், 5 மாநில தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியாகும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வீட்டு உபயோகம், மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதால் நடுத்தர, ஏழை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.