3-ம் நாள் ஆட்டம்.. – பெட்ரோல், டீசல் விலை 76 காசுகள் உயர்வு..!!
சென்னையில் 4 நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு முறையும் பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்து வந்தது. ஆனால், ஐந்து மாநில தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பிறகு, 2021 நவம்பர் மாதத்துக்கு பின்னர், பெட்ரோல், டீசல் எண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தாலும், உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்து வந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
137 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமையும்(22.03.20222), புதன்கிழமை(23.03.2022)அன்றும் தொடர்ந்து இரண்டு தினங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், நேற்று(24.03.2022) வியாழக்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்வில்லை.
இந்நிலையில், இந்த வாரத்தில் நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக இன்று (25.03.2022) பெட்ரோல் மற்றும் டீசல் முறையே தலா 76 காசுகள் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. நான்கே நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.27 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.2.28 காசுகளும் அதிகரித்துள்ளது.
இதேபோல் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 காசுகள் உயர்ந்து ரூ.112.51-க்கும், ஒரு லிட்டர் டீசல் 85 காசுகள் உயர்ந்து ரூ.96.70-க்கும் விற்பனையாகிறது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 காசுகள் அதிகரித்து ரூ.106.34 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 80 காசுகள் அதிகரித்து ரூ.91.42 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையும் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.