ஆட்டம் ஆரம்பமாகிடுச்சு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!!
137 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு முறையும் பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்து வந்தது. ஆனால், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் குறித்த அறிவிப்புக்கு பிறகு, 2021 நவம்பர் மாதத்துக்கு பின்னர், பெட்ரோல், டீசல் எண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தாலும், உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்து வந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
சர்வதேச சந்தையில் செவ்வாய்கிழமை நிலவரப்படி(22.03.2022) நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 119 ரூபாயாக உள்ள நிலையில், 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 76 காசுகள் உயர்ந்து ரூ.92.19 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டெல்லியை பொறுத்த வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.21-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.86.17-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.82-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.51 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.62 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
5 மாநில தேர்தலை வைத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இல்லை என்று மோடி அரசு அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது ஒன்றிய அரசின் பேச்சு நம்பகத்தன்மையற்றது என்பதை விளக்குவதாக இருப்பதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.