பெட்ரோல், டீசல் விலை உயர்வு – லிட்டருக்கு ரூ.20 வரை உயரும் என கணிப்பு ..!!
சென்னையில் 4-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை முறையே 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் லிட்டருக்கு ரூ.3.20 வரை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(BPCL) ஆகிய பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் 4-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று(26.03.2022) பெட்ரோல், டீசல் லிட்டருக்கு முறையே 76 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 காசுகள் உயர்ந்து ரூ.113.35-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 85 காசுகள் உயர்ந்து ரூ.97.55-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில், பெட்ரோல், டீசல் முறையே 80 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.61 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.89.87 காசுகளாகவும் விற்பனையாகிறது.
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு ரூ.110 முதல் 120 வரை உயரும்போது, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 முதல் 20 வரை அதிகரிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. இது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.