பங்குச்சந்தை மேலும் உயருமா? காரணங்கள் இதோ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்தால் அதன் மீது கூடுதல் வரியை இந்திய அரசாங்கம் விதித்திருந்தது. அந்த வரியை திரும்ப பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், ரிலையன்ஸ், ONGC போன்ற நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.
இதே போல், கமாடிட்டி பொருட்களின் விலையும் சற்று குறைய தொடங்கி உள்ளதும், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழாக உள்ளதையும் சந்தை சாதகமான அம்சமாக பார்க்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஏற்றம் என தெரிகிறது. இருப்பினும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், இந்த உயர்வு என்பது நிலையானதாக இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
மேலும், கூடிய விரைவில், இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என தெரிகிறது. இதுவும் சந்தைக்கு சற்று பாதகமாகவே அமையும்.
எதிர்பார்த்தை விட முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இது விவசாய விளை பொருட்களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டி உள்ளது.
இது போன்ற காரணங்களை கடந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதோடு சேர்த்து, வரும் 26ம் தேதி அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, ஒரு சதவிதம் வரை வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறைந்தபட்சம் 0.75 சதவிதமாவது வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது போன்ற அம்சங்கள், சந்தையின் இன்றைய உயர்வை கேள்விக்குறியாக்கி உள்ளன.