இன்றே அமலுக்கு வருகிறது பெட்ரோல் விலை குறைப்பு!
பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறி இருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். முன்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. மூன்று மாத காலத்தில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராத சூழலில், சாமானியர்கள் நிதிநிலை அறிக்கையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
ஒன்றிய அரசானது தொடர்ந்து பெட்ரோல் மீதான வரியை அதிகரித்தது மட்டுமன்றி, பகிர்ந்தளிக்க இயலாத வரி எல்லைகளான “CESS” தொகுதிக்குள் கூடுதல் வரியைக் கொண்டு சென்று மிகப்பெரிய அளவில் வரிச் சுமையை மக்கள் மீது திணிப்பதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்கான காரணம் என்று ஒன்றிய அரசின் மீது குற்றம் சாட்டிய நிதி அமைச்சர், இந்த விலை குறைப்பு அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையைத் தொடர்ந்து நிதித்துறை செயலர் கிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார், ” தேவையான இடங்களில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், வருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது, ஏழைகளும், நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது, டீசல் உயர்தர வாகனங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் மீதான வரி குறைக்கப்படவில்லை என்றும், பெட்ரோல் மீதான இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்” என்றும் கூறினார்.
இந்த விலை குறைப்பால் தமிழகத்தில் 100 ரூபாய்க்கு மேல் விற்றுக்கொண்டிருந்த பெட்ரோல் விலை மீண்டும் குறையும் சூழல் ஏற்பட்டிருப்பது அன்றாடம் வாகனங்களைப் பயன்படுத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஓரளவு ஆறுதலை உண்டாக்கி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.