முடிவுக்கு வந்த நீண்டநாள் சர்ச்சை..
இந்தியாவில் பேடிஎம், ஜிபேவுக்கு பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பணப்பரிவர்த்தனை செயலி என்றால் அது போன்பேவாக இருக்கிறது. இந்நிலையில் ஃபோன்பே மற்றும் பாரத் பே ஆகிய நிறுவனங்கள் இடையே நீண்டநாள் பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. அதாவது இரு நிறுவனங்களும் தங்கள் பெயர்களில் pe என்ற கடைசி வார்த்தைகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இரு தரப்பும் டிரேட்மார்க் என்ற காப்புரிமை தங்களுக்குத்தான் சொந்தம் என்று நீண்ட ஆண்டுகளாக வழக்கு நடத்தி வந்தனர். இந்நிலையில் இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நீண்டகால வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் , பல வழக்குகள் நடத்தி வந்ததாக கூறியுள்ளது. இந்நிலையில் பே என்ற வார்த்தைக்கு யார் காப்புரிமை பெற்றிருந்தாலும் இரு தரப்பும் பரஸ்பரம் விட்டுத்தருவதாக கூறியுள்ளனர். ஏற்கனவே இது தொடர்பாக பதிவுக்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை திரும்பப்பெறவும் முடிவு செய்திருப்பதாக இரு நிறுவனங்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாரத் பே நிறுவனத்தின் தலைவர் ராஜ்நிஷ் குமார், இரு தரப்பும் தொழில்ரீதியில் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்வதை பாராட்டுவதாக குறிப்பிட்டார். இரு தரப்பும் பலனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஃபோன் பே நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.