கொஞ்சம் தள்ளிவைங்க பிளீஸ்….
அக்டோபர் 1முதல் ஆன்லைன் விளையாட்டுகள்,சூதாட்டத்துக்கு 28%ஜிஎஸ்டி அமலாகியுள்ள நிலையில் அதனை சற்று தள்ளி வைக்க இந்திய கேமிங் பவுண்டேஷன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக ஜிஎஸ்டி அமைப்புக்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வைத்த கோரிக்கையில் , பல மாநிலங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பிட்ட அந்த அமைப்பில் 120 நிறுவனங்கள் உள்ளன.MPL,Gameskraft, Nazara Technologies, Deltatech Gaming, Head Digital Works (A23), WinZO உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த அமைப்பில் உள்ளன.உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தஉடன் இதனை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேம்ஸ்கிராப்ட் நிறுவனத்துக்கு 21,000கோடி ரூபாய் அபராதம் விதித்த வழக்கில் தீர்ப்பை இந்த நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ளனர். ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றம் இதுதொடர்பான வழக்குகளில் நிறுவனங்களுக்கு ஆதரவான தீர்ப்பை அளித்ததையும் கேமிங் பவுண்டேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கும், வாய்ப்பு சார்ந்த விளையாட்டுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். பல மாநிலங்கள் மாநில ஜிஎஸ்டி சட்டங்களை திருத்தி அமைக்காமல் இருப்பதால் இருமுறை கூட ஜிஎஸ்டி கட்ட நேரிடுவதாகவும் கேமிங் சங்கம் ஆதங்கம் தெரிவிக்கிறது.நிஜமான பணத்தை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகள்தான் இந்தியாவில் 13,500 கோடி ரூபாய்க்கு நடப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கேமிங் வருமானத்தில் இது 77%ஆக உள்ளது.நிலவரத்தை ஆராய்ந்து 6 மாதங்களில் முடிவெடுக்க இருப்பதாக அண்மையில் நிதியமைச்சகம் தெரிவித்தது. நிலைமை இப்படி இருக்கையில் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.