ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் பிரபல நிறுவனம்..
உலகளவில் பிரபலமான காலணி நிறுவனமாக ஜெர்மனியைச் சேர்ந்த பிர்கன்ஸ்டாக் என்ற நிறுவனம் திகழ்கிறது.இந்த நிறுவனம் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரம்ப பங்கு வெளியீட்டை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செய்ய இருக்கிறது. உலகளவில் காலணிகள் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. 1744 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கொரோனா காலத்திலும் சிறப்பான விற்பனை செய்யப்பட்டிருந்தது. காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை அந்நிறுவனம் செய்து வருகிறது. 32 மில்லியன் பங்குகளை விற்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. ஒரு பங்கு 44 முதல் 49 டாலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த பங்கு விற்பனை காரணமாக 1.58 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலத்திற்கு ஏற்ப புதுப்புது டிசைன்களில் காலணிகளை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்த நிறுவனம், கடன்களை குறைக்கவும், புதிய விரிவாக்கப்பணிகளை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது. பல ஆண்டுகள் பாரம்பரியம் பெற்ற இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு பல முன்னணி நிறுவனங்களும் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக LVMHநிறுவனத்தின் ஆதரவும் இந்த நிறுவனத்துக்கு இருப்பதால் முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தைகளில் அதிக ஆவலை இந்தநிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் வரும் நாட்களில் காட்சிகள் எப்படி மாறுகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்