கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் அழுத்தமா?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 90 டாலர்களை கடந்து உயர்ந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதமும் மேலும் உயர வாய்ப்புள்ளது.மேலும் கச்சா எண்ணெய் விலை இப்போதைக்கு சரிய வாய்ப்பு இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவாக 90 டாலர்களை கடந்திருக்கிறது. சவுதி அரேபியா,ரஷ்யா ஆகிய நாடுகள் உற்பத்தியை குறைத்ததன் விளைவாகவே இந்த விலையேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும்பட்சத்தில் டாலர் அல்லாத மற்ற நாட்டு சந்தைகள் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும என்கிறார்கள் நிபுணர்கள், கச்சா எண்ணெய் நிலவரத்தை கருத்தில் கொண்டு தான் செப்டம்பரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் 7,850 .70 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை இந்தியாவில் விற்றுள்ளனர். என்னதான் நடக்கிறது என்று இந்திய முதலீட்டாளர்கள் கவனமாக பார்த்து முதலீடு செய்வதாக கூறிய நிபுணர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் சந்தையில் சில திருத்தங்கள் வரலாம் என்று கூறுகின்றனர். போதுமான அளவுக்கு கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வைத்திருப்பதால் அடுத்த 2,3 மாதங்களுக்கு விலை ஏற்றம் கண்டாலும் இந்தியாவில் பெரிய தாக்கம் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள். தற்போதுள்ள விலையேற்றம் நெடுநாட்கள் நீடிக்காது என்பதும் நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.அடுத்த 3-4 மாதங்களுக்குள் சர்வதேச கச்சா எண்ணெய் வீழ்ச்சியை சந்திக்கவே அதிகவாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.