சமையல் காஸ் சிலிண்டர் விலை ₹25 உயர்வு; வேதனையில் மக்கள்!
வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டரின் (LPG) விலை ₹25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் சமையல் காஸ் சிலிண்டரின் விலை ₹165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த துயரத்தை கொடுத்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாதம் தோறும் நிர்ணயித்து வருகிறது.
2020 டிசம்பரில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₹50 உயர்த்தப்பட்டு, ₹610-ல் இருந்து ₹660 ஆக இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4-ஆம் தேதி ₹25-ம், பிப்ரவரி 15-ம் தேதி ₹50-ம் உயர்த்தப்பட்ட நிலையில் பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 1 ஆம் தேதிகளில் மீண்டும் ₹25 உயர்த்தப்பட்டது.
இந்த கணக்கின் படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டரின் விலை ₹125 அதிகரிக்கப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி, சிலிண்டர் விலை ₹10 குறைக்கப்பட்டது. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் காஸ் சிலிண்டரின் விலை ₹25 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. சென்னையில் கடந்த மாதம் ₹850.50-க்கு விற்பனையான காஸ் சிலிண்டர், ₹25 அதிகரித்து ₹875.50 ஆக மாறியுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ₹165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் ஏற்கனவே பெருந்தொற்று கால பொருளாதார சுமைகளால் அவதியுறும் பொதுமக்கள் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.