உண்மையை போட்டு உடைத்த ரகுராம் ராஜன்!!!
உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடியே என்று பழைய திகில் படங்களில் வரும் வசனங்களைப்போன்றவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மனதில் பட்டதை அப்பட்டமாக போட்டு உடைத்துவிடுவார். இந்த நிலையில் அண்மையில் இணைய பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி கவனத்தை ஈர்த்திருக்கிறது.அதில் இந்தியாவில் செல்போன் உற்பத்தியை அதிகரிப்பதாக அரசு தரவுகள் தெரிவித்தாலும் உண்மையில் இந்தியாவில் அதனை உற்பத்தி செய்யவில்லை என்றும் வெறும் அசம்பிள் என்ற ஒருங்கிணைப்பை மட்டுமே இந்தியாவில் நிறுவனங்கள் செய்வதாக கூறி அதிர வைத்திருக்கிறார். இந்தியாவில் இருந்து செல்போன்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி என்பது 2018 நிதியாண்டில் 3.6 பில்லியன் மற்றும் 334 மில்லியனாக இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் தற்போது ஏற்றுமதி 11 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருப்பதாக கூறியுள்ள ரகுராம் ராஜன், அரைக்கடத்தி,கேமிராக்கள்,லித்தியம் அயன் பேட்டரிகள் உள்ளிட்டவை இறக்குமதி என்பது 23 நிதியாண்டில் 32.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக கூறியுள்ள அவர், வெறும் 11 பில்லியன் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்தால்தான் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை தருவோம் என்ற நிலை மாறி,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வெறுமனே ஒருங்கிணைத்து அளிக்கப்படுகிறது. இதற்கு எப்படி உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை தரலாம் என்றும் அவர் நியாயமான கேள்வியை முன்வைத்தார். உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டுமானால், வெளிநாட்டு உற்பத்தியை இறக்குமதி செய்வதை குறைக்கவேண்டும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை விரிவுபடுத்தும் முன்னர் உண்மையில் உற்பத்தி நடக்கிறதா இல்லை வெறும் அசம்பிளிங் மட்டும்தான் நடக்கிறதா என்பதை மத்திய அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும் என்றும் நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல தனது உரையை ரகுராம் ராஜன் முடித்துள்ளார்.