மக்களவையில் ராகுல்காந்தி அபார பேச்சு!!
இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி,மக்களவையில் செவ்வாய்க்கிழமை(பிப்.7)ல் உரையாற்றினார். அதில்,அதானி குழும பங்குகள் வளர்ச்சி,வீழ்ச்சி பற்றி காரசாரமாக ராகுல்காந்தி பேசினார். பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன்வைத்தார். கடந்த 2014ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 609ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி 2022-ல் எப்படி உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்துக்கு வரமுடிந்தது. இது என்ன ஏதும் அதிசயம் நடந்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய ராகுல்காந்தி, அதானி குழும வளர்ச்சிக்கும் பிரதமர் மோடி அரசுக்கும் தொடர்பு உள்ளதாக விமர்சித்தார். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் ராகுல்காந்தி பேசினார். தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம் என எங்கு கேட்டாலும் அதானியின் பெயர் மட்டுமே கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.அதானி துவங்கும் எந்த தொழிலும் சரிவையே கண்டது இல்லையே ஏன் என மக்கள் தன்னை கேள்வி எழுப்புவதாகவும் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கேட்டுள்ளார். ஆனால் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி கூறக்கூடாது என்று பாஜக எம்பி கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதானியின் தனியார்சொகுசு விமானத்தில் பிரதமர் மோடி அமர்ந்து பேசியுள்ள புகைப்படத்தை காட்டி பேசிய ராகுல்காந்தியை மக்களவைத்தலைவர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை. அதானியின் சொத்துமதிப்பு 2014-ல் 8 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்ததாகவும், தற்போது அது எப்படி 140 பில்லியன் டாலராக ஆனது என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானிக்கு சாதகமாக விதிகளை மத்திய அரசு தளர்த்தி வருவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி,முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு விமான நிலையங்களை அளிக்கக்கூடாது என்ற விதியை மத்திய அரசு மாற்றிய பிறகு அதானி வசம் 6 விமான நிலையங்கள் உள்ளதாக ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஜிவிகே நிறுவனத்திடம் இருந்து சிபிஐ,அமலாக்கத்துறையை பயன்படுத்தி அதானி குழுமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இந்திய ஒற்றுமை பயணத்தின்போது மக்கள் விலைவாசி,வேலைவாய்ப்பின்மை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து தம்மிடம் பேசியதாகவும்,குடியரசுத்தலைவர் உரையில் அதுபற்றி எதுவும் இல்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அக்னிபத் திட்டம் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலம் இந்திய ராணுவத்தில் திணிக்கப்பட்ட ஒன்று எனவும் ராகுல்காந்தி சாடினார்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் யோசனைப்படியே அக்னிபத் திட்டத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்திய ராணுவத்தில் கொண்டுவந்துள்ளதாகவும் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.