இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யலாம்: RBI அறிவிப்பு!
வங்கிச் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக ரிசர்வ் வங்கி இன்று (08/10/2021) சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிவித்துள்ளது.
இன்டர்நெட் சேவை இல்லாத அல்லது குறைவாக இருக்கும் தொலைதூர பகுதிகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்கும் திட்டம் ஆகஸ்ட் 2020 இல் அறிவிக்கப்பட்டது. கார்டுகள் மற்றும் மொபைல் மூலம் சிறிய மதிப்பு ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை ரூ. 200 வரை செலுத்தும் வசதியைப் பரிசோதனை அடிப்படையில் அனுமதித்தது.
“செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2021 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் மூன்று பரிசோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த பரிசோதனையின்போது, சிறிய மதிப்புகளாக 2.41 லட்சம் முறை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ. 1.16 கோடி வெற்றிகரமாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டது” என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
“இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்பக் கால பரிசோதனை முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இதன் முடிவுகளிலிருந்து நாடு முழுவதும் ஆஃப்லைன் முறையில் சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் கட்டமைப்பை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளோம். இது டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை விரிவாக்கும். மேலும் இது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை அமைத்துத்தரும்” என்று அவர் கூறினார்.