விசாரிக்கும் ரிசர்வ் வங்கி..!!!
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் தற்போது ஐடிபிஐ வங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியை விற்க ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் திட்டமிட்டுள்ளன. இதனை வாங்குவதற்கு பலதரப்பிலும் ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த சூழலில், ஐடிபிஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டுவோரில் யாருக்கு நிறுவனத்தை அளிப்பது என்று ரிசர்வ் வங்கி நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறது. இதற்கான பணிகளை இம்மாத இறுதிக்குள் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் வசம் இந்த வங்கியின் 45.48% பங்குகள் உள்ளன.இதேபோல் 49.24% பங்குகளை எல்ஐசி நிறுவனம் வைத்துள்ளது. இதில் 60%தற்போது விற்பனைக்கு வர இருக்கிறது. கோடக் மகிந்திரா வங்கி,கத்தோலிக்க சிரியன் வங்கி மற்றும் எமிரேட்ஸ் NBD நிறுவனங்கள் ஐடிபிஐ வங்கியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. வழக்கமாக ஒரு வங்கியை நடத்த 12 முதல் 18 மாதங்கள் வரை அவகாசத்தை ரிசர்வ் வங்கி அளிக்கும். இந்த மாத இறுதிக்குள் பணிகளை செய்ய அரசு தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில்,ஐடிபிஐ நிறுவன பங்குகள் 3%உயர்ந்திருக்கின்றன. இந்திய அரசிடம் இருக்கும் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை சொத்துக்களில் 510 பில்லியன் ரூபாய் மதிப்புள்ளவற்றை விற்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஐடிபிஐ வங்கி விற்பனை திட்டம் வேகமெடுத்துள்ளது. வரும் 5 மாநில தேர்தல்கள் மற்றும் 2024 பொதுத்தேர்தல்களுக்கு முன்னர்,இந்த வங்கியை விற்கும் முடிவு இறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி விசாரிக்கும் பணிகள் முடிவடைந்த உடனேயே ஐடிபிஐ வங்கியை சரியான நபரிடம் விற்பதற்கான பணிகள் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.