NUE உரிமத்தை நிறுத்தி வைத்துள்ள ரிசர்வ் வங்கி!!!
இந்தியாவில் தற்போது வரை தேசிய கொடுப்பனவு கழகமான NPCI அமைப்பு மூலம் நிதிசார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் NPCIக்கு மாற்றாக New umbrella entity என்ற புதிய முறையையும் பெரிய நிறுவனங்கள் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. இந்த NUE முறையில் இந்தியாவில் கூகுள், பேஸ்புக், அமேசான் , பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை பதிவு செய்ய முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் NUE வகையில் நிறுவனங்களை பதிவு செய்வதை ரிசர்வ் வங்கி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 6 பெரிய அமைப்புகள் NUE விதிகளின் கீழ் வரும் நிலையில் அவற்றிற்கான உரிமத்தை நிறுத்துவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்துக்கு மாற்றாக எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் NUE வகையில் உரிமம் கேட்பதில் ரிசர்வ் வங்கிக்கு எந்த பெரிய உடன்பாடும் இல்லை என்பதால் இந்த உரிமம் வழங்குவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. NPCIஐ அங்கீகரித்துள்ள ரிசர்வ் வங்கி, இதன் கீழ் UPI பரிவர்த்தனைகளை வணிக அமைப்புகள் மேற்கொள்ள எந்த ஆட்சேபமும் செய்யவில்லை.ஆனால் NUE முறையில் புதிய சில்லறை டிஜிட்டல் பேமண்ட் அமைப்பை உருவாக்க நினைப்பதத்தான் ரிசர்வ் வங்கி தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இந்த புதிய அமைப்பில் ஒவ்வொரு பெரிய நிறுவனங்களும் தங்கள் ஆதரவாக உள்ள வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளனர். உதாரணமாக டாடா குழுமம் கோடாக் மகேந்திரா வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட வங்களோடும், அமேசான் நிறுவனம் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளுடன் கூட்டு வைத்து செயல்பட்டு வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டிலேயே NPCI கீழ் யார் வரவேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ள நிலையில் NUE திட்டம் குறித்து கடந்த 2021-ம் ஆண்டு மார்ச்-ஏப்ரலில் சில நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் விசாரித்ததாகவும், அதன்பிறகு யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்படும்பட்சத்தில் அது NPCI-க்கு பெரிய சுமையாக மாறும் என்று கடந்த 2020ம் ஆண்டே தெரிவித்துவிட்டதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. IMPS,NFS உள்ளிட்ட முறைகளை அங்கீகரித்த ரிசர்வ் வங்கி, புதிய நுட்பத்தை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறது என தங்களுக்கு புரியவில்லை என்று பெரிய நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.