அர்ஜூனரா ரிசர்வ் வங்கி ஆளுநர் தாஸ்..?
உலக அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வந்தது. இருந்தபோதிலும் அவற்றை சமாளித்து இந்திய ரிசர்வ் வங்கி சிறப்பாக செயலாற்றி வருகிறது. 2023ஆம் ஆண்டில், இந்தியாவின் ரிசர்வ் வங்கி எடுத்த ஸ்திரமான முடிவுகளின் காரணமாகவே இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்றால் அது மிகையல்ல. இந்தாண்டு அந்த வங்கி எடுத்த முக்கிய நிகழ்வுகளை சற்று அசை போடுவோம். ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் மாற்றம், வட்டி விகிதத்தில் மாற்றம் உள்ளிட்டவை இதில் மிகமுக்கியமானவை. அர்ஜூனருக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்ததை போல பணவீக்கத்தை மட்டுமே இலக்காக கொண்டு சக்தி காந்ததாஸ் அட்டகாசமான முடிவுகளை எடுத்துள்ளார்.
இந்தாண்டு தொடக்கத்தில் பணவீக்கம் என்பது 6.5% ஆக இருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியால் 2-6விழுக்காடு மட்டுமே பணவீக்கத்தை தாங்கிக்கொள்ள இயலும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து, ரிசர்வ் வங்கி அட்டகாசமான பணிகளை செய்துள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நிர்வாக முடிவுகளை அரசு எடுக்க ரிசர்வ் வங்கியின் திட்டங்கள் பயனுள்ளதாக அமைந்திருந்தது. கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால், கைமேல் பலன் கிடைத்து வருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் சக்தி காந்ததாஸின் முடிவுகள் வழிவகுத்துள்ளன.