“உண்மையான வளர்ச்சி 6-6.5%மட்டும்தான்”
இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தனது கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 8 முதல் 8.5 விழுக்காடு இல்லை என்று தெரிவித்த ரகுராம் ராஜன்,உண்மையில் அது 6 முதல் 6.5 விழுக்காடாகத்தான் இருக்கும் என்றார். 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி விகிதம் 9 முதல் 10 விழுக்காடாக இருக்க வேண்டும் என்றும், தொடர்ச்சியாக அது உயர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரகுராம் ராஜனுடன் இந்தியாவின் முன்னாள் மூத்த நிதி ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியமும் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்தார். இந்தியாவின் வளர்ச்சி பற்றி பலரும் பேசி வரும் நிலையில் அதிகரித்து வரும் விலைவாசி குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார். உலகின் பல நாடுகளிலும் பணியாளர்களின் சம்பளம் அதிகரித்துள்ள இதே நேரத்தில் இந்தியாவில் ஏன் உயர்த்தப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியா வளர்ந்து வரவேண்டுமெனில் விவசாயத்துறையில் ஏன் வேலைவாய்ப்புகள் இல்லை என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இந்தியாவில் பணியாளர்கள் அதிகளவில் இல்லை என்றும் அரசாங்க உத்தியோகத்துக்கு மக்கள் அடித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். உற்பத்தி சார்ந்த 23 துறைகளில் 12 துறைகள் பெருந்தொற்று நேரத்தில் வெகுவாக குறைந்துவிட்டதாகவும், விழுந்த உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் எழும்பவே முடியவில்லையே ஏன் என்று ரகுராம் ராஜன் சரமாரியாக கேட்டார். இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் குறைந்திருப்பபதாகவும், கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவுக்கு இருசக்கர வாகனத்தின் விற்பனை அதிகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு பக்கம் சீனா பிளஸ் ஒன் என்ற நிலையில் இந்தியாவை பற்றி பேசுவதாகவும், மற்றொரு பக்கம் ஏழை மற்றும் குறைந்த வருவாய் உள்ள மக்கள் வேலைவாய்ப்புக்காக ஏங்குவதாகவும் ரகுராம் ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.