ஸ்பைஸ் ஜெட்டுக்கு அவகாசம் தர மறுப்பு…
தமிழ்நாட்டில் சன்டிவியை தெரியாத நபர்கள் வெகு சிலராகத்தான் இருக்கமுடியும். இந்த நிறுவனத்தின் உரிமையாளராக கலாநிதி மாறன் இருக்கிறார். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கலாநிதி மாறனும்,ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இணை நிறுவனரான அஜய் சிங்கும் இணைந்து வணிகம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இருதரப்புக்கும் இடையே நேரிட்ட பிரச்னை காரணமாக வர்த்தக உறவு முடிந்தது. இந்த நிலையில் கலாநிதி மாறனுக்கு தர வேண்டிய பணம் தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. 579 கோடி ரூபாய் கலாநிதி மாறனுக்கு தரவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.ஆனால் 2020-ல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 243 கோடி ரூபாய் பணம் கலாநிதி மாறனுக்கு தரவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் நவம்பர் மாதமே இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. நிலைமை இப்படி இருக்க கலாநிதி மாறனுக்கு தரவேண்டிய தொகையில் 10 கோடி ரூபாய் மட்டும் இப்போது தருவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் இதனை ஏற்க கலாநிதிமாறன் தரப்பு மறுத்துவிட்டது. இந்த சூழலில் இன்னும் சற்று அவகாசம் தேவை என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கோரியது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் அவகாசம் தர முடியாது என்று கூறிவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 270 கோடி ரூபாய் மாறனுக்கு தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் 75 கோடி ரூபாயை வட்டியாக 3 மாதங்களில் தர வேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த தொகை வழங்கப்படவில்லை என்பதே மாறன் தரப்பு வாதமாக இருந்தது. கடந்த மே மாதம் 380 கோடி ரூபாய் ஸ்பைஸ்ஜெட் தரவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றத்தை மாறன் தரப்பு நாடியிருந்தனர். இதனை அடுத்தே உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மாறனுக்கு தரவேண்டிய 350 கோடி ரூபாய்க்கு அவகாசம் எல்லாம் தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.