19 டன் தங்கத்தை இறக்கியுள்ள ரிசர்வ் வங்கி…
உலகளவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 19 டன் தங்கத்தை வாங்கி குவித்திருக்கிறது. இது கடந்த ஓராண்டில் வாங்கிய மொத்த அளவான 16 டன்னைவிடவும் அதிகமாகும். 2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை தங்கத்தின் மீதான விலை 13 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி 3 மாதங்களில் வாங்கிய மொத்த தங்கத்தில் பிப்ரவரியில் 4.7 டன்னும், ஜனவரியில் 9 டன்னும், மீதமுள்ள 5.3 டன் மார்ச்சிலும் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது 822 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. ஜூலை 2022-க்கு பிறகு இந்தியாவிடம் அதிக தங்கம் கையிருப்பு இப்போதுதான் இருக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியது. இதேபோல் கடந்த 2021-ல் இந்தியா 77 டன் தங்கத்தை வாங்கியது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது கூட ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை நிறுத்தவில்லை. 2020ஆம் ஆண்டு இறுதியில் ரிசர்வ் வங்கியிடம் 676.6 டன் தங்கம் கையிருப்பு இருந்தது. அதற்கு அடுத்த 2 ஆண்டுகளில் மட்டும் ரிசர்வ் வங்கி மேலும் 118 டன் தங்த்தை வாங்கி குவித்து வைத்துள்ளது. அமெரிக்க டாலர்களாக மட்டும் இல்லாமல் தங்கமாகவும் போதுமான அளவு கையிருப்பை வைத்திக்க ரிசர்வ் வங்கி முயற்சித்து வருகிறது. இதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இயலும் என்றும் அந்த வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவிடம் தங்கம் அதிகளவில் இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச பணப்பரிவர்த்தனைகள் அதிகம் வரும் என்று உலக தங்க கவுன்சிலின் பிராந்திய தலைமை செயல் அதிகாரியான சச்சின் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.