சதமடிக்குமா தக்காளி விலை ! கவலையில் பொதுமக்கள் !
இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.93 ஆக உயர்ந்திருக்கிறது, பருவம் தவறிய மழை காரணமாக நாடு முழுவதும் மண்டிகளுக்கு தக்காளி வருகை மந்தமாகி இருப்பதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. நேற்று கொல்கத்தாவில் தக்காளி விலை கிலோ ரூ.93 ஆகவும், சென்னையில் கிலோ ரூ.60, டெல்லியில் ரூ.59 ஆகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்ட 175-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.50 க்கும் அதிகமாகவே இருந்தது.
தக்காளி பயிர் செய்யப்படும் மாநிலங்களில் பருவம் தப்பிய மழை காரணமாக விளைச்சல் பாதிப்படைந்து நகர்ப்புற மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்திருக்கிறது, மும்பையில், தக்காளி வருகை அக்டோபர் 16 அன்று 50 டன்கள் குறைந்து 241 டன்களாக இருந்தது, இது ஒரு வாரத்திற்கு முன்பு 290 டன்களாக இருந்தது,
“தொடர் மழை காரணமாக மண்டியிலிருந்து நல்ல தரமான தக்காளி கிடைக்கவில்லை, வாங்குபவர்கள் நல்லவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள், அழுகிய தக்காளிகளுக்கும் சேர்த்தே நாங்கள் விலை கொடுக்கிறோம், எனவே, அந்த இழப்பை மீட்க நாங்கள் விலை ஏற்றம் செய்ய வேண்டியதாகிறது” என்று தில்லியின் கரோல் பாக் காலனியில் காய்கறி விற்கும் வியாபாரி ஷிவாலால் யாதவ் கூறுகிறார். தற்போது, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய முக்கிய மாநிலங்களில் அறுவடை நடந்து வருகிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற தக்காளி பெருமளவில் பயிர் செய்யும் மாநிலங்களில் பருவம் தவறிய மழையானது பயிரை சேதப்படுத்தியுள்ளது, இதன் காரணமாக நுகர்வு சந்தைகளுக்கு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய தக்காளி உற்பத்தியாளர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஆண்டுக்கு 7.89 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்து சுமார் 19.75 மில்லியன் டன் தக்காளியை உற்பத்தி செய்கிறது, இதன் சராசரி மகசூல் ஹெக்டேருக்கு 25.05 டன்கள், பெருந்தொற்றில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் சமையலுக்கான அத்தியாவசிய உணவுப் பொருளான தக்காளியின் இந்த விலை உயர்வு இந்திய நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.