30 % முதல் 100 % அதிகரிக்கும் விமான கட்டணங்கள் !
திருவிழாக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், விமானங்களில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதாலும், விமான கட்டணங்கள் 30% முதல் 100% வரை அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் பரவலை அடுத்து நாடெங்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனையடுத்து விமான நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகின. அந்த பொருளாதார சரிவில் இருந்து மீள ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் விமான நிறுவனங்கள் இறங்கின.
அதன் ஒரு கட்டமாக பயணிகளின் விமான கட்டணங்களை உயர்த்தியுள்ளன. உதாரணமாக குஜராத்தில் இருந்து அந்தமான் செல்லும் விமானத்தின் டிக்கெட் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து செல்ல 50 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை, கொல்கத்தா செல்லும் விமானங்களில் டிக்கெட் விலை 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அடுத்து வரும் பண்டிகை தினங்களான கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு விடுமுறையிலிருந்து இந்த விலை ஏற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் விமான சேவைகள் 46 சதவீதம் அதிகரித்திருக்கிறது.