உருளைக்கிழங்கு விலை உயரும் அபாயம்..
இந்தியாவில் ஆட்டம் போட்ட தக்காளி விலை தற்போது சரியத் தொடங்கியுள்ள நிலையில் ,உருளைக்கிழங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரும் டிசம்பர் வரை விலை சற்று அதிகரித்தே காணப்படும் என்கிறார்கள் வணிகர்கள். டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மண்டியில் கடந்த சில நாட்களாக இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் , ஹரியானா, பஞ்சாபில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை 40 விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. அதே நேரம் உருளை கிழங்கின் விலை 5 முதல் 10 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் உருளைக்கிழங்குகள் அதிகளவில் பதுக்கப்பட்டு வருவதாகவும், அதனை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்க உத்தரபிரதேசத்தில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் வெப்ப அலை காரணமாக உருளைக்கிழங்கின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் உருளைக்கிழங்கை விரும்பி அதிகம் சாப்பிட ஆரம்பித்துள்ளதாகவும், இதன் காரணமாக உற்பத்தி குறைந்து, நுகர்வு அதிகரித்துள்ளது. இந்த காரணிகளால் இந்தாண்டு இறுதி வரைக்கும் உருளைக்கிழங்கின் விலை 5 முதல் 110 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று மண்டி வைத்திருப்போர் தெரிவிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 1கோடியே 70 லட்சம் டன் உருளைக்கிழங்கு இந்தாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.