ரூ. 2000 – புதிய வழிகளை தேடும் பணக்காரர்கள்!!!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அது எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது என்று ஒரு பெரிய பட்டியலே வெளியாகியுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி அளித்த காலகட்டத்திற்குள் அதனை மாற்ற பல ஓட்டையான வழிகள் இருக்கின்றன. அதில் குறிப்பாக பலரும் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றாமல் அதனை தங்கமாக மாற்ற விரும்புகின்றனர். மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தங்கமாக மாற்ற கூடுதல் தொகையும் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உதாரணமாக, மும்பையில் 63,800 ரூபாய்க்கு 10 கிராம் தங்கம் விற்கப்பட்ட நிலையில் அதனை 67 ஆயிரம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
இன்னும் சிலரோ கோவில்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தரிசனத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். கடை திறக்கும் நேரம் போக கள்ளச்சந்தையில் கருப்புப்பணத்தை கடைகளில் நகையாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது. சாதாரண மக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலோ அல்லது 2லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினாலோ பான் எண் கேட்கப்படுகிறது. பெரிய கருப்புப்பணம் வைத்திருப்போர் இது போல மாற்றினால் அதனை கண்காணிக்க தனி வழி தேவை என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. வருமான வரிச்சட்டத்தின்படி ஒரு நபர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக யாரும் வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டாலர் மற்றும் யூரோக்களில் மாற்றவும் பலர் முயற்சித்து வருகின்றனர். அரசாங்கத்தை ஏமாற்ற எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்தனை வழிகளையும் பணம் பதுக்குவோர் கையில் எடுத்துள்ளதாக பட்டய கணக்கர்கள் தெரிவிக்கின்றனர். கணக்கில் வராத பணத்தை 2016-ல் பெரும் பணக்காரர்கள் கிளப்புகள், ஜிம்களில் செலவு செய்தது போலவே தற்போதும் செய்யத் தொடங்கியுள்ளனர். பணமதிப்பிழப்பின் போது, பணத்தை அக்கவுண்டில் அளவுக்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்களுக்கு அப்போது வருமான வரி நோட்டீஸ் அளித்தது. இதே நிலை தற்போதும் வரும் என்று அஞ்சியுள்ள பணம் பதுக்கியோர், புதுப்புது வழிகளை தேடி வருகின்றனர்.