சோஷியல் மீடியாவுல ஓட்றதுல உண்மையில்லையாமாம்…
2 ஆயிரம் ரூபாய்க்கு மேல UPI முறையில் பணம் அனுப்பினால் அதற்கு தனியாக பணம் வசூலிக்கப்படும் என்று வதந்தி பரவியது. இதையடுத்து களத்தில் இறங்கியுள்ள தேசிய பணப்பரிமாற்றக் கழகமான NPCI இந்த பிரச்சனைக்கு விளக்கமளித்துள்ளது. அதாவது நாம் தற்போது பயன்படுத்தி வரும் பண பரிவர்த்தனை செயலிகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், wallet வைத்து செயல்படும், PPI எனப்படும் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பணம் வசூலிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. அதாவது யாரோ ஒருவருக்கு நீங்கள் உங்கள் வாலட்டில் இருந்து யுபிஐ மூலம் அனுப்பினால் மட்டுமே அதற்கான interchange கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் வரும் 1-ம் தேதி முதல் தான் இந்த கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. 1.1விழுக்காடு பணம் செலுத்த வேண்டியிருக்கும். மற்றபடி ஒரு வங்கிக்கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக்கணக்குக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் எந்த தொகையும் செலுத்தத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு வாடிக்கையாளர்களும், வணிகர்களும் 800 கோடி பரிவர்த்தனைகளை இலவசமாகவே செய்து வருகின்றனர். வங்கிக்கணக்குடன் UPIயை இணைத்தால் மட்டும் போதும் அதிலே எளிமையாக பணத்தை அனுப்பிக்கொள்ள முடியும். 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட NPCI அமைப்பு எளிமையான பணப் பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையில் பலவிதமான டிஜிட்டல் சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.