ரஷ்யா இருக்க பயமேன்!!!
ரஷ்யா-உக்ரைன் போரால் உலகின் பலநாடுகள் பாதிக்கப்பட்டாலும் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையால் உண்மையில் இந்தியாவுக்குத்தான் அதிக லாபம். எந்த நாட்டில் இருந்து எவ்வளவு கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது என்ற பட்டியல் கிடைத்திருக்கிறது. அதன்படிமே நிலவரப்படி ரஷ்யாவிடம் இருந்துதான் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10லட்சத்து 96 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது ஏப்ரல் மாதம் வங்கியதைவிட 15 விழுக்காடு அதிகமாகும். இந்தியா ஒருநாட்டிடம் இருந்து மட்டும் கச்சா எண்ணெய் வாங்கவில்லை.சவுதி அரேபியா,ஈராக்,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா, ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வாங்கினாலும், இவை அனைத்தையும்விட அதிகளவாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. மே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் 42 விழுக்காடு ரஷ்யாவில் இருந்து மட்டுமே இந்தியா வாங்கியுள்ளது. 2021க்கு பிறகு சவுதி இடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயின் அளவு என்பது 5,60,000 டன் என்ற அளவுக்கு வீழ்ந்துள்ளது. ஓபெக் எனப்படும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் இருந்து 39 விழுக்காடு அளவுக்கு மட்டுமே இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. தொடர்ந்து 8ஆவது முறையாக இந்த அளவு என்பது அதிகரித்து வருகிறது. இப்போது வரை அதிக கச்சா எண்ணெயை இந்தியா ரஷ்யாவிடமும்,இரண்டாவது அதிக அளவாக ஈராக்கிடம் இருந்தும், 3ஆவது அதிகபட்சமாக சவுதி அரேபியாவிடம் இருந்தும் வாங்குவது தெரியவந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் வந்து சேர 68.21 டாலர் போதுமானது. ஆனால் சவுதியிடம் இருந்து ஒரு பேரல் 86.96 டாலரும்,ஈராக்கிடம் இருந்து 77.77 டாலராகவும் விலை உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தின. ஆனால் அந்த பற்றாக்குறையை இந்தியா தற்போது பூர்த்தி செய்துள்ளது.