ஆகஸ்ட்டில் ஆப்பு வைக்கிறது ரஷ்யா..
கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. ஏனெனில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா மலிவு விலையில் வாங்கி சுத்தப்படுத்தி மக்களுக்கு விற்று வருகிறது. இந்த நிலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளான ஓபெக் அமைப்பு அண்மையில் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தன. இந்த உற்பத்தி குறைப்புக்கு சவுதி அரேபியா முதலில் முன்னெடுப்பை செய்தது. இதற்கு அடுத்த இடத்தில் தற்போது ரஷ்யா உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 5 லட்சம் பேரல்கள் வரை ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை ரஷ்யா குறைக்க திட்டமிட்டுள்ளது. உலக கச்சா எண்ணெய் விலையை சமநிலைப்படுத்த இந்த முடிவை ரஷ்யா எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 1 லட்சம் பேரல் அளவுக்கு குறைத்துள்ளது. இது பற்றி அறிவித்த ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக்,நாள்தோறும் 5 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக கூறியுள்ளார். இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மட்டும் கூறியுள்ள ரஷ்ய துணை பிரதமர் , ஏற்கனவே பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட முடிவைத்தான் தற்போது அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். 2024 ஆண்டு முழுவதும் இதே நிலையில்தான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ரஷ்யாவின் முடிவு இந்தியா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்,எனினும் ரஷ்ய கச்சா எண்ணெய் விலை தற்போது உள்ளதைப்போல மலிவு விலையில் கிடைப்பது தொடருமா இல்லை ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வதகவலும் வெளியாகவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் ,மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிசெய்ய பல்வேறு தடைகளை விதித்தனர். ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரஷ்யா போரை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.