ரூபிளின் மதிப்பு சரிவு – ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம்..!!
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரூபிளின் மதிப்பு கடும் சரிவடைந்துள்ளது. இதனால் ரஷ்ய ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ரஷ்யா மீது பொருளாதாரத்தடை:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 6-வது நாளாக நீடித்து வரும் போரினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
SWIFT முறையிலிருந்து நீக்கம் :
மேலும், SWIFT என அழைக்கப்படும் விரைவான சர்வதேச பணப்பரிவர்த்தனை முறையிலிருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை நீக்க இத்தாலி, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதனால் சர்வதேச அளவில் ரஷ்யாவால் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு பணம் பெறுவதில் ரஷ்யாவுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் நாணமான ரூபினிள் மதிப்பு சுமார் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, ரஷ்யாவின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதுடன், ரஷ்ய பங்குச் சந்தைகள் ஒருநாள் செயல்படாது என்றும் அறிவித்தது.
பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யாவால் அந்திய செலாவணியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், ரூபிளின் மதிப்பு சரிவடைந்ததுடன், அதன் மதிப்பை உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கியால் முடியாமல் போய் விட்டது.
போர் தொடர்ந்தால் வரும் நாட்களில் வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரூபிளின் மதிப்பு கடும் சரிவடைந்துள்ளது. இதனால் ரஷ்ய ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.