காலமானார் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்..
சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் உடல்நலக்குறைவால் 75 வயதில் நவம்பர் 14ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. 1978ஆம் ஆண்டு சஹாரா குழுமத்தை வெறும் 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அவர் தொடங்கினார். கட்டுமானத்துறையில் இருந்து ஊடகத் துறை வரை அவர் பல துறைகளில் கொடிகட்டி பறந்தார்.விமானத்துறையிலும் கால்பதித்த சஹாரா குழுமம் பின்னாளில் அதனை ஜெட் ஏர்வேசிடம் விற்றுவிட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராகவும் சஹாரா குழுமம் திகழ்ந்தது. எத்தனை வேகத்தில் வளர்ந்தாரோ அத்தனை வேகத்தில் பிரச்னைகளையும் சுப்ரதா ராய் சந்தித்தார். சிட் ஃபண்ட் நடத்திய சுப்ரதா ராய், பொதுமக்களிடம் இருந்து அதிக பணம் பெற்று திரும்பத் தரவில்லை என்று புகார் எழுந்தது. பங்குச்சந்தைகளில் 3 கோடி இந்தியர்களிடம் சுமார் 24,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமும் வசூலித்த புகாரும் சுப்ரதா ராய்மீது பதிவானது. வாங்கிய பணத்துக்காக நடந்த வழக்குகளில் பல ஆண்டுகளாக நீதிமன்ற படிகளை அவர் மிதிக்கும் சூழலும் உருவாகியது. சர்ச்சைகள் பல இருந்தாலும் அரசியல் கட்சியினருடன் சுப்ரதா ராய் மிக நெருக்கம் காட்டி வந்தார். இந்த நிலையில் 75 வயதில் சுப்ரதா ராய் மரணமடைந்தது அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.