18 மாசமா சம்பளம் தரலயாம்…
ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு ஹெவி இன்ஜினியரிங் கார்பரேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது பணியாளர்களுக்கு 18 மாதங்களாக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் செப்டம்பர் 21 ஆம் தேதி டெல்லியில் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரியை வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட நிறுவனம், இஸ்ரோவிற்கு பல தரப்பு பணிகளை செய்து தந்திருக்கின்றனர். குறிப்பிட்ட இந்த நிறுவனம் சந்திரயானுக்கு HEC 400/60 EOT (electric overhead travelling) crane,சமதள ஸ்லைடிங் டோர் உள்ளிட்டவை செய்து தந்திருக்கிறது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான்-3 திட்டத்துக்கு பணியாற்றியவர்களுக்கு உரிய சம்பளம் தரவேண்டும் என்று பல தொகுதி எம்பிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.மாநிலத்தில் 14 மக்களவை உறுப்பினர்கள் இருந்தும் அனைவரும் ஆளுங்கட்சியினராக இருந்தும் எந்தவித பலனும் இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.2,800 ஊழியர்களுக்கும் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆதித்யா எல்1 விண்கலத்துக்கு வேலை செய்த நிறுவனத்துக்கு சம்பளம் தராமல் இருப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.கடந்த 18 மாதங்களாக அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.