புதிய CEO நியமனம் – பறக்க தயாராகும் Jet Airways..!!
Jet Airways நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சீவ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் விமான சேவையை தொடங்க உள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தனது விமான சேவையை நிறுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலான் மற்றும் யுகே-வைச் சேர்ந்த கால்ராக் கேபிட்டல் ஆகியோரைக் கொண்ட ஜலான்-கல்ராக் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமான நிறுவனத்தை புதுப்பித்தது.
இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சஞ்சீவ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள நார்டன் பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ பட்டப் படிப்பை முடித்துள்ள சஞ்சீவ், அமெரிக்காவின் நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கினார். விஸ்தாரா விமான நிறுவனத்தில் வர்த்தகப் பிரிவு அதிகாரியாகவும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராகவும் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஓப்ராய் ஹோட்டலின் தலைவராக உள்ள சஞ்சீவ் கபூர் அந்த பதவியிலிருந்து விலகி, வரும் ஏப்ரல் 4-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று கொள்வார் என்று கூறப்படுகிறது.
தனது புதிய பொறுப்பு குறித்து தெரிவித்த சஞ்சீவ், மீண்டும் விமானப் போக்குவரத்து துறைக்கு திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளேன். ஜெட் ஏர்வேஸ் 3 ஆண்டுகளாக தனது பயணத்தை நிறுத்திய போதிலும், அதற்கென தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் பறக்கும் நாளுக்காக இனியும் காத்திருக்க முடியாது என்று தெரிவித்தார்.