அறிமுகத்திலேயே அசத்திய சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் -ன் பங்குகள்!
சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் செப்டம்பர் 24 அன்று ரூ. 811.50 க்கு பட்டியலிடப்பட்டது. NSE-ல் தொடக்க விலை ரூ. 811.50 ஆக இருந்த போது, BSE பங்குச்சந்தையில் ரூ. 811.35 ஆக இருந்ததது. செப்டம்பர் 14 முதல் 16 வரை விற்கப்பட்ட ரூ.1,283 கோடி ஐபிஓ அதன் சலுகைக் காலத்தில் 11.47 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு பங்கிற்கு ரூ. 734 முதல் ரூ. 744 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. பங்குச்சந்தையின் விவரப்படி, சான்செரா இன்ஜினியரிங் வெளியிட்ட 1.21 கோடி பங்குகளை விட முதலீட்டாளர்கள் 13.88 கோடி பங்குகளை ஏலம் எடுத்தனர்.
தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers) ஒதுக்கப்பட்ட பகுதி 26.47 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது, அதே சமயம் நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 11.37 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 3.15 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஐபிஓ-வில் இருந்து இந்த நிறுவனம் நேரடியாக எந்த வருமானத்தையும் பெறாது.
பெங்களூரை சேர்ந்த சன்செரா இன்ஜினியரிங் நிறுவனம் வாகனம் மற்றும் ஆட்டோமொபைல் அல்லாத துறைகளில் சிக்கலான மற்றும் நுணுக்கமான பாகங்களை உருவாக்குகிறது. வாகனத் துறையில், இருசக்கர வாகனம், பயணிகள் வாகனம், வணிக வாகனம், பிரேக்கிங் மற்றும் பிற அமைப்புகளுக்கு முக்கியமான இயந்திர பாகங்கள் மற்றும் அவற்றை இணைப்பதற்கு தேவைப்படும் பாகங்களை உருவாக்குகிறது.
சன்செரா இன்ஜினியரிங், சிறிய வகை வாகனப் பிரிவில், இணைக்கும் கம்பிகளை தயாரிக்கும் நிறுவனங்களில் உலகளவில் முதல் 10 சப்ளையர்களில் ஒன்றாக உள்ளது. CY 2020-க்கான வணிக வாகனப் பிரிவில், இணைக்கும் கம்பிகளின் உலகளாவிய சப்ளையராகவும் உள்ளது. இணைக்கும் கம்பிகள், கியர் ஷிஃப்டர் ஃபோர்க்ஸ் போன்ற இருசக்கர மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு தேவையான பாகங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
ஆட்டோமொபைல் அல்லாது, இந்நிறுவனம் விண்வெளி, ஆஃப்-ரோட், விவசாயம் மற்றும் பொறியியல் போன்ற பிற பிரிவுகளுக்கு தேவைப்படும் பாகங்களை உற்பத்தி செய்கிறது. பெங்களூரு மட்டுமின்றி இந்நிறுவனம் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது.