கெடுபிடி காட்டும் சவுதி..
கொரோனா காலத்துக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை ரஷ்யா-உக்ரைன் போரின்போது உச்சம் தொட்டது. பின்னர் நிலைமை மெல்ல மெல்ல சீரடைந்து வந்தபோது, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து சாதாரண மக்களை அவதியடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதனால் பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்த சூழலில் அரபு லைட் ரக கச்சா எண்ணெய் விலையை , ஒரு பேரலுக்கு 4 டாலர்கள் வரை உயர்த்த சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.இந்த புதிய விலை டிசம்பர் மாதம் முதல் அமலாக இருக்கிறது.சவுதி அராம்கோ என்ற நிறுவனம் இந்த விலையேற்றத்தை ஆசிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஓமன்,துபாயில் விற்கப்படும் கச்சா எண்ணெயை விட சவுதி அரேபியாவில் அதிக விலைக்கு கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது.
சூப்பர் லைட்,எக்ஸ்ட்ரா லைட்,லைட், மீடியம்,ஹெவி என பலதரப்பிலும் இந்த கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த புதிய விலையேற்றத்தால் மேலும் தீவிர பாதிப்பை சந்திப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.