7,250 கோடி ரூபாய் ஐபிஓவுக்கு செபி இசைவு..
ஆரம்ப பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓவுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சித்து வந்த நிலையில் அதற்கு செபி தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 7,250 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெற ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் மின்சார வாகன நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த ஐபிஓ அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 9.5 கோடி ஈக்விட்டி பங்குகள் மூலமாக 5,500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஓஎப்எஸ் எனப்படும் ஆஃபர் ஃபார் சேல் முறையில் ஆயிரத்து 750 கோடி ரூபாய் திரட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அந்த நிறுவனத்தின் 4கோடியே 74 லட்சம் பங்குகளை ஆரம்ப பங்கு வெளியீடாக செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஏற்கனவே அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள இண்டஸ் டிரஸ்ட், அல்பைன் ஆப்பர்சுனிட்டி ஃபண்ட் உள்ளிட்டவர்களுக்கு பங்குகளை பிரித்து வழங்கவும் பணிகள் நடக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இருக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீடு செய்வது இதுவே முதல்முறையாகும். 2017-ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், சந்தையில் 35 விழுக்காடு அளவுக்கு பங்களிப்பை தந்துள்ளது. 2023 நிதியாண்டில் ஓலா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 21 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. பெறப்படும் தொகையில் 800 கோடி ரூபாய் கடனை அடைக்கவும்,1226 கோடி ரூபாயை முதலீட்டு செலவீனமாக மாற்றவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 1,600கோடி ரூபாயும், 350 கோடி ரூபாய் அளவுக்கு பசுமை ஆற்றல் முன்னெடுப்புகளையும் அந்நிறுவனம் செய்ய இருக்கிறது. 2022-ல் 456 கோடி ரூபாயாக இருந்த அந்நிறுவனத்தின் வருவாய் 2023நிதியாண்டில் 2,782 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதே நேரம் 2022-ல் 784 கோடி ரூபாயாக இருந்த ஓலா நிறுவனத்தின் கடன், 2023-ல் 1472 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.