ஐபிஓ மூலம் நிதி திரட்டும் 6 நிறுவனங்கள்! – ஒப்புதல் அளித்த Sebi!
செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (Sebi) தற்போது ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு ஐபிஓ மூலன் நிதி திரட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஒப்புதல் பெற்ற ஆறு நிறுவனங்கள்: FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், அதானி வில்மர், ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி, சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், லேடென்ட் வியூ அனலிட்டிக்ஸ் மற்றும் பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ்.
அதானி வில்மர்
அதானி வில்மர் என்பது வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரபலமான சமையல் எண்ணெய் ‘Fortune’ க்கு பெயர் பெற்றது. அதானி வில்மர் ஐபிஓ மூலம் 4,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது உள்ளது. 1999 இல் அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த வில்மர் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனம் தான் அதானி வில்மர் (Adani Wilmar) ஆகும். இது Fortune பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய், அரிசி மற்றும் சர்க்கரை போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.
ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மதிப்பு சுமார் மூன்று மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பங்குச்சந்தையில், இந்த நிறுவனம் 2000 கோடி ரூபாய்க்கு அளவுக்கு முதலீட்டைத் திரட்ட உள்ளதாகத் தெரிகிறது. நிறுவனத்தின் சில்லறை சந்தை 92 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த மருத்துவ காப்பீட்டுச் சேவையில் 50 சதவீத பங்குகளை ஸ்டார் ஹெல்த் கொண்டுள்ளது. ஐபிஓ வெளியீட்டை நிறைவு செய்தால், இந்தியப் பங்குச்சந்தைக்கு வரும் முதல் மருத்துவ காப்பீட்டுச் சேவை நிறுவனம் என்ற நிலையை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பெறும்.
சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ்
ஐதராபாதை சேர்ந்த சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 60 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 28.42 லட்சம் புதிய பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், மருந்து துறையில் பயன்படுத்தப்படும் எம்.சி.சி எனும் மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, ஆலைகளின் விரிவாக்கத்துக்கும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
பென்னா சிமெண்ட்
பென்னா சிமெண்ட் நிறுவனம் 1550 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதில் 1300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டினையும், 250 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை புரமோட்டர்கள் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 1991ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்கு விற்பனையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35%மும், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு 50%மும், அன்னிய நிறுவனங்களுக்கு 15% விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ்
நைக்கா நிறுவனத்தின் கீழ் செயல்படும் FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், ஐபிஓ மூலம் 525 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. நைக்கா முதலீட்டு வங்கியாளர் ஃபல்குனி நாயரால் 2012 இல் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் ஆன்லைன் அழகு சாதன பொருட்களை விற்பதில் முன்னோடியாக உள்ளது.
லேடென்ட் வியூ அனலிட்டிக்ஸ்
லேடென்ட் வியூ அனலிட்டிக்ஸ் 474 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.