அதானி வில்மரின் ₹4,500 கோடி IPO-வை தற்காலிகமாக நிறுத்தி வைத்த SEBI!
மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான அதானி வில்மர் லிமிடெட்டின் முன்மொழியப்பட்ட ₹4,500 கோடி ஐபிஓ பங்குவெளியீட்டினை, தாய் நிறுவனமான அதானி என்டர்ப்ரைசஸ் பெற்ற அயல்நாட்டு முதலீடுகள் குறித்த விசாரணையின் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.
ஐபிஓ மூலம் நிதி திரட்ட அதானி வில்மர் ஆகஸ்ட் 3 ம் தேதி செபியிடம் ஆரம்ப ஆவணங்களைத் தாக்கல் செய்தது. சனிக்கிழமை ஒரு அறிக்கையில், அதானி குழுவின் செய்தித் தொடர்பாளர், “ஐபிஓ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறித்து எங்களுக்கு செபியிடமிருந்து எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை” என்று கூறினார். “கட்டுப்பாட்டாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்” என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதானி என்டர்ப்ரைசஸ்-க்கும் வில்மர் குழுவுக்கும் இடையிலான 50:50 கூட்டு நிறுவனமாகும். ஃபார்சுன் பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், அரிசி, சர்க்கரை மற்றும் பல உணவு பொருட்களையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதுடன் சமையல் எண்ணெய் தொழிலில் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. ஐபிஓ மூலம் கிடைக்கும் வருமானத்தை தற்போதுள்ள உற்பத்தி வசதிகளை விரிவாக்குவதற்கும் வேறு பல முன்னேற்றங்களுக்கு உபயோகப் படுத்தும் என்று தெரியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செபியின் கொள்கையின்படி கட்டுப்பாட்டாளரின் ஒரு துறை விசாரணை மேற்கொள்ளும் நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் வேறு அங்க நிறுவனங்களுக்கு 90 நாட்கள் வரை புதிய அனுமதி அனுமதி நிறுத்தி வைக்கப்படும் என்றும், விசாரணை முழுமை பெறவில்லை எனில் மேலும் 45 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
பெருங்குழுமமாக உருவெடுத்துள்ள அதானி குழுமம், அதானி என்டர்ப்ரைசஸ், அதானி க்ரீன் எனெர்ஜி, அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோடல் காஸ் ஆகிய நிறுவனங்களை இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.