இமயமலை யோகியும்..NSE-யும் – அதிர வைக்கும் உண்மை..!!
இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான National Stock Exchange Of India(NSE) எனப்படும் தேசிய பங்குச் சந்தை 20 ஆண்டுகளாக இமயமலை யோகியின் கட்டுப்பாட்டில் இருந்த அதிர வைக்கும் செய்தி அம்பலமாகியுள்ளது.
முடிவுகள் எடுத்த முகம் தெரியாத சாமியார்:
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா ஆலோசனை:
நேரில் சந்திக்க முடியாத அந்த யோகியை மிகவும் உயர்ந்தவர் என்று அழைத்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தையின் 5 ஆண்டு கணிப்புகள், நிதித் தரவு, ஈவுத்தொகை விகிதம், வணிகத் திட்டங்கள், வாரியக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் போன்ற தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டார். மேலும் ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த சாமியாரின் உத்தரவின்பேரில், சித்ரா ராமகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆனந்த் சுப்ரமணியனை 2013-ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் NSE-யின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தார். படிப்படியாக ஆனந்த் சுப்ரமணியத்தின் ஊதியம் அதிகரிக்கப்பட்டு, 2015-ம் ஆண்டில் 5 கோடியை எட்டியது. அத்துடன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும், வசதிகளும் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு தரப்பட்டன.
செபி நடவடிக்கை:
இதுதொடர்பாக செபி தொடர்ந்த வழக்கின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இமயமலை யோகியின் வழிகாட்டுதல்படியே, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு பணி வழங்கியதாக சித்ரா ராமகிருஷ்ணா ஒப்பு கொண்டுள்ளார்.
இதையடுத்து, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடியும், முன்னாள் செயலதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு தலா 2 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை தடுக்காமல் இருந்த NSE-ன் ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத தொகையை 45 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிய சேவைகள், திட்டங்களை அறிமுகப்படுத்த தேசிய பங்குச் சந்தைக்கு செபி தடை விதித்துள்ளது.