அதிக விலைக்கு விற்றது குற்றம் தான்!!
பிக் பில்லியன் டே உள்ளிட்ட சிறப்பு நாட்களில் வழக்கமான விலையைவிட சலுகை விலைகளில் பொருட்களை ஃபிளிப்கார்ட் நிறுவனம் விற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் அண்மையில் பெண் ஒருவர் பிக்பில்லியன்டே ஆஃபரில் ஷாம்பு பாட்டில் ஆர்டர் செய்திருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த சவுமியா என்ற அந்த நபர் பதஞ்சலி ஷாம்புவை கடந்த 2019ஆம் ஆண்டு வாங்கி இருக்கிறார். ஷாம்புவின் விலையே 95 ரூபாய்தான், ஆனால் அந்த ஷாம்புவின் விலையை 140 ரூபாய் என்றும் அதற்கு 99 ரூபாய் ஷிப்பிங் கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான சவுமியா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இது தொடர்பாக பிளிப்கார்ட் மற்றும் சூரத்தைச் சேர்ந்த HBK enterprises நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் கவனமாக விசாரித்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் MRPவிலையை விட அதிக விலைக்கு விற்றதற்காக ஃபிளிப்கார்ட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் 20ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது. இந்த 20 ஆயிரம் ரூபாயில் 10 ஆயிரம் ரூபாயை சவுமியாவுக்கு தனிப்பட்ட முறையிலும், விதிகளை மீறி வணிகம் செய்ததற்காக 5 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும் தரவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இது போக MRPயைவிட அதிகமாக வசூலிக்கப்பட்ட 96 ரூபாயையும் சேர்த்து அளிக்க நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.