கேள்விக்குறியாகும் கார்கள் விற்பனை..
தொடர் பழுது, அதிக ஈஎம்ஐ உள்ளிட்ட காரணிகளால் சிறிய ரக கார்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகளவில் டீலர்களிடம் தேங்கிக்கிடக்கும் காட்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 48 ஆயிரம் கோடி முதல் 54 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான 4 லட்சம் முதல் 4.5லட்சம் கார்கள் சில்லறை விற்பனை கடைகளில் குவிந்து கிடக்கின்றன. மாருதி சுசுக்கியின் டீலர் ஒருவர் கூறும்போது, கடந்த 3.5 மாதங்களாக கார் விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதாக கூறினார். மிகவும் சிறிய ரக கார்களை மக்கள் வாங்க விரும்புவதில்லை என்றும் கடந்த 2 ஆண்டுகளில் எஸ்யுவி ரக கார்களைத்தான் மக்கள் அதிகம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாருதி சுசுக்கி மட்டுமின்றி மற்ற நிறுவனங்களின் 2லட்சம் கார்களும் கார் தயாரிக்கும் நிறுவனங்களின் பார்கிங் பகுதிகளிலேயே குவிந்துள்ளன.கடந்த மே மாதம் மிகவும் மோசமான விற்பனையாக இருந்ததாகவும் சில டீலர்கள் கூறுகின்றனர். ஹியூண்டாய் கார்களில் கிரெட்டாவைத்தவிர்த்து அனைத்து கார்களுக்கும் தள்ளுபடிகள் வலுவாக அளிக்கப்பட்டன. குறிப்பாக கிராண்ட் ஐ10 நியாஸ் ரக கார்களுக்கு 38 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைத்தது, இதேபோல் வென்யூ மேன்வல் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு 35,000 ரூபாய், கோனா எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இவ்வளவு சலுகைகள் அளித்தும் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. விற்பனை ஆகிறதா இல்லையா என்றெல்லாம் சரிபார்க்காமல் ஒருபக்கம் உற்பத்தி செய்யப்படுவதும், இரண்டாவதாக வாடிக்கையாளர்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு கார்களை வாங்குவதும் இதற்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. விநியோக சங்கிலியில் நிதி நிலைத்தன்மை அவசியம் வேண்டும் என்றும், டீலர்கள் கூறும் தேவைகளை சரியாக கணிக்க கார் நிறுவனங்களும் முன்வரவேண்டியுள்ளது.